இறைச்சிக்கடையொன்றில்
உதவியாளனாக பணியாற்றும் சிறுவனுக்கு
உண்மையில் அதுதான் முதல் நாள்
அதுநாள் வரை
அவனுக்கு தரப்பட்ட வேலைகள் மென்மையானவை.
வெட்டப்படும் ஆடுகளின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொள்வது
மரித்துப்போன கோழிகளின் இறகுகளை உரிப்பது
வெட்டுண்ட ஆட்டுக்கால்களை இளஞ்சூட்டு நெருப்பில் வாட்டுவது
மரத்துண்டுகளை கொலைவாட்களை கழுவுவது..
முதல் கொலைக்கான
உத்தரவு வந்தக் கணம்
அவன் திகைக்கிறான்.
கோழிகளையும், ஆடுகளையும்
மலங்க மலங்க பார்க்கிறான்
பழுப்பும் சிவப்பும் தீற்றலுமாயிருக்கும்
மரத்துண்டை பயங்கலந்து பார்க்கிறான்
நடுங்கும் கையோடு கத்தியை தொடுகிறான்.
ஒரு உயிர் கோழியை தூக்குகிறான்
கண்களை மூடிக்கொள்கிறான்
எதையோ தீவிரமாக யோசிக்கிறான்..
அந்தக்கோழியை விட்டுவிட்டு
இன்னொரு கோழியை தேர்வு செய்கிறான்
அதன் கழுத்தை திருக
அவனுக்கு தயக்கமாக இருக்கிறது
கத்தியால் வெட்டுவதை தேர்வு செய்கிறான்..
கூடுமானவரை வெட்டவிருக்கும் கோழியின்
கண்களை பார்ப்பதை தவிர்க்கவே விரும்புகிறான்
இறைச்சிக் கடை உரிமையாளர்
அவனை பார்த்து நட்பாக புன்னகை செய்கிறார்
தாயைப் போல அறிவுரைகள் சொல்கிறார்
ஆற்றுப்படுத்துகிறார்
பருவத்துக்கு வந்துவிட்ட
போர்வீரனாய் கர்வம் கொள்ளும்
அந்த சிறுவன்
செய்யும் முதல் கொலை
மிகுந்த கொடூரமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் எடுத்துக்கொண்ட கால அளவு
மிகுந்த நீளமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் மனதில் விவாதித்தது
மிகுந்த தத்துவார்த்தமானது
ஒரு கொலைக்கு முன்னர்
அவன் வாழ்ந்த வாழ்க்கை
மிகுந்த சிக்கலானது
அவனுக்கு போதிக்கப்பட்ட போதனைகள்
மிகுந்த எண்ணிக்கையிலானது
அந்த சிறுவனது
மரத்திலிருந்து உதிர்ந்த
இலைகள் மீண்டும் துளிர்க்கின்றன..
இப்போதெல்லாம்
அவன் விரல்கள்
ஒரு புல்லாங்குழல் வாசிப்பவனாய்
ஒரு வீணைக்கருவியின் தந்தியை மீட்டுபவனாய்
ஒரு மிருதங்க கலைஞனாய்
இறைச்சியை வெட்டுவதற்கு
பழக்கமாகியிருந்தது
•••
Thanks.. http://nvmonline.blogspot.com/
2 Comments
நல்லாயிருக்கு பாஸ்.. அனால் என்ன சொல்ல வாரீங்க’னுதான் புரியல...
ReplyDeleteஅருமை! முடிவு கொஞ்சம் சொல்லி இருக்கலாம்!
ReplyDeleteபடிச்சீங்களா?:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"
Drop Anything