எனது நண்பன் ஸீன் (scene) பிச்சையின் பெயர்க்காரணத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக, 'ஸீன்' பிச்சை எனப்படும் பிச்சைமுத்துவை உங்களுக்கு லேசாக அறிமுகம் செய்துவிடுகிறேன்.
பிச்சைமுத்து, ஊரில் என்னுடன் கல்லூரியில் படித்தவன். தொண்ணூறுகளில், எங்கள் கல்லூரியின் கதாநாயகன். கல்லூரியின் மதில் சுவரில், சிவப்பு நிற பெயிண்டில் பொரிதாக, 'ஜோதி ஐ லவ் யு — பா. பிச்சைமுத்து. பி.ஏ. வரலாறு, முதலாமாண்டு' என்று தனது பெயர், வகுப்புடன் எழுதி, ஜோதியின் மீதான தனது காதலை பகிரங்கமாக உலகுக்கு அறிவித்தவன். ஜோதி, கல்லூரி முதல்வரான புலவர் கார்வேந்தனிடம் புகார் தெரிவித்தாள். புலவர் கார்வேந்தன் பிச்சையை அழைத்து விசாரித்தார்.
பிச்சைமுத்து, ''சார்… எவனாச்சும் மாட்டிக்கிற மாதிரி சொந்த பேர சுவத்துல எழுதி, 'ஐ லவ் யு' சொல்லுவானா? சும்மா ஆதாரம் இல்லாம சொல்லக்கூடாது. என் பேரக் கெடுக்கணும்னு, எவனோ வேணும்னு எழுதியிருக்கான் சார்… திஸ் இஸ் எ டிபிக்கல் கேஸ் ஆஃப் கேரக்டர் அஸாஸினேஷன்.'' என்று ஆங்கிலத்தில் எடுத்துவிட… கார்வேந்தன் மிரண்டுவிட்டார்.
''தம்பி… கடைசியா ஏதோ கேரக்டர் அஸாஸினேஷன்னு சொன்னீங்களே. அப்படின்னா என்ன தம்பி?'' என்றார்.
''நடத்தைப் படுகொலை. இன்னும் தூய தமிழ்ல சொன்னா குணப் படுகொலை. சில பேரு பண்பு படுகொலைன்னும் சொல்வாங்கய்யா."
''அற்புதம்… அற்புதம்… என்ன ஒரு அழகான தமிழ்.'' என்றவர் ஜோதியை நோக்கி, ''தம்பி பேசறத எல்லாம் பார்த்தா, அவன் எழுதின மாதிரி தெரியலம்மா. நீ ஆதாரத்தோட வாம்மா… நான் நடவடிக்கை எடுக்குறேன்.'' என்று அவளை அனுப்பி வைத்துவிட்டார். ஆனால் உண்மையில் அதை எழுதியது பிச்சைமுத்துதான்.
இப்படியாக எங்கள் கல்லூரியில் புகழ்பெற்ற பிச்சைமுத்து, எனக்கு அறிமுகமானது வேறு விதத்தில்.
அப்போதுதான் கல்லூரி முதலாமாண்டு சேர்ந்திருந்தேன். என்னைப் போன்ற கல்லூரி மாணவர்களின் விரகதாபங்களுக்கு அப்போது தீனி போட்டுக்கொண்டிருந்த 'விருந்து', 'பருவகாலம்' போன்ற அச்சு ஊடகங்களில் சலிப்புற்று, காட்சி ஊடகத்திற்கு மாற நான் முயற்சித்துக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் எவ்வகைப் பலான படங்களுக்கு போனால், நல்ல ஸீன்கள் இருக்கும் என்று தெரியாமல் நான் தவித்துக்கொண்டிருந்தேன். இது தொடர்பாக நண்பன் செந்திலிடம் ஆலோசனை கேட்டபோது, ''ஸீன் படம் பாக்கணுமா? நம்ம ஸீன் பிச்சையப் பாரு… அவன் சொல்ற படத்துக்கு போனா, நாலு ஸீன் காரண்டி.'' என்று கூறி பிச்சையிடம் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத்தான்.
''பிச்சை… இது நம்ம ஃப்ரண்டு சந்துரு…நம்ம காலேஜ்தான, பி.காம். ஃபர்ஸ்ட் இயர். ஸீன் படம் பாக்கணுமாம்… கொஞ்சம் கைட் பண்ணு…'' என்று கூறிவிட்டு சென்று விட்டான்.
''ம்…'' என்று சில வினாடிகள் என் முகத்தை உற்றுப் பார்த்த பிச்சை, ''தம்மடிப்பியா?'' என்றான்.
''அடிப்பன்ங்க…''
ஒரு ஃபில்டர் சிகரெட்டை எடுத்து நீட்டிய பிச்சை, ''இதுக்கு முன்னாடி ஸீன் படம் பாத்துருக்கியா?'' என்றான்.
''பத்தாவது படிக்குறப்ப ஒரே ஒரு படம் போனங்க… பச்சை வார்ப்புகள்னு ஒரு மலையாளப் படம். ஊர் ஃபுல்லா ப்ரமிளா மாவாட்டற மாதிரி பெரிய, பெரிய போஸ்டர். படத்துக்கு போனா வேஸ்ட்டுங்க. அந்த மாவாட்டற சீன் மட்டும்தான் இருந்துச்சு.''
''சந்துரு… மலையாளப் படம் போன… சரி… டைரக்டர் யாருன்னு பாத்தியா?''
''இல்ல… அத எப்படி பாக்கறது?''
''போஸ்டர்ல நடிகைங்க படத்துக்கு கீழ, எங்கயாச்சும் சின்னதா டைரக்டட் பை… இல்ல இயக்கம்னு போட்டிருப்பான். அத முதல்ல பாக்கணும். டைரக்ஷன் ஜெயதேவன் இல்ல… சந்திரகுமார்… இல்ல கே. எஸ். கோபாலகிருஷ்ணன்(இவர் தமிழில் 'பணமா பாசமா' 'கற்பகம்' போன்ற குடும்பப் படங்களை இயக்கிய கே. எஸ். கோபாலகிருஷ்ணன் அல்ல) படம் போனீன்னா… படத்துலயே ஏழெட்டு அரைகுறை சீனு கேரண்டியா இருக்கும். இப்ப கிருஷ்ணா தியேட்டர்ல, மார்னிங் ஷோ என்ன படம் போட்டிருக்கான்?''
''அவள் ஒரு வசந்தம்.''
''ம்…. டைரக்ஷன் யாரு தெரியுமா? ஜெயதேவன்… வர்ற சனிக்கிழமை வா. போலாம்''
அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு காலைகாட்சியாக மட்டும் பலான மலையாளப்படங்கள் ஓட்டி தமிழர்களின் விரகதாபங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்தார்கள் (எப்படி புத்திசாலித்தனமாக வீக்என்டில் போட்டிருக்கிறார்கள் பாருங்கள்.).
''சனிக்கிழமையா?"
''ஏன் சனிக்கிழமைன்னா என்னா?"
''இல்ல… புரட்டாசி சனிக்கிழமை…'' என்று இழுத்தேன்.
''புரட்டாசி சனிக்கிழமை கவுச்சிதான் திங்ககூடாது… மலையாளப் படம்ல்லாம் பாக்கலாம் வா….'' என்றான்.
சனிக்கிழமை… குறுக்கு வழியில் கருவக்காடு வழியாக நானும், பிச்சையும் கிருஷ்ணா தியேட்டருக்கு சென்றுகொண்டிருந்தோம்.
''வீட்டுலருந்துதானே வர்ற?
''ஆமாம்…''
''உங்கப்பா வீட்டுலதானே இருக்காரு?''
''ஆமாம். ஏன்;?''
''இல்ல… திடீர்னு கௌம்பி மலையாளப் படத்துக்கு வந்துரப் போறாரு…''
''சே…சே… எங்கப்பால்லாம் அந்த மாதிரி கிடையாது."
''டேய்… எங்கிட்ட சொல்றியா? சந்துரு… ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்க. இந்த அப்பனுங்க இருக்கானுங்களே… புள்ளைங்களுக்கு முன்னாடி யோக்கியனாட்டம்தான் இருப்பானுங்க. ஆனா மகா அயோக்கியப் பசங்க… எங்கப்பனை கூட யோக்கியன்னுதான் நினைச்சுட்டிருந்தேன். ஆனா என்கிட்ட மாட்டிகிட்டாருல்ல…?'"
''எப்படி?''
''போன மாசம் ''ட்யுஷன் டீச்சர்'' மலையாளப் படம் பாக்கப் போயிருந்தேன். இடைவேளைல, டீ ஆர்டர் பண்ணிட்டு திரும்பி பாக்குறேன்… எங்கப்பா நிக்கிறாரு. நான் ஆடிப்போயிட்டேன். அவரும் என்னைப் பாத்துட்டாரு…''
''அப்புறம்… செம திட்டா?'' என்றேன் ஆர்வத்துடன்.
''அவரு எங்க திட்டுறது… நான்தான் புடிச்சு எகிறிட்டேன். ஏன்யா… வீட்டுல வயசுக்கு வந்த பையன வச்சுகிட்டு, சனிக்கிழமையும் அதுவுமா ஆஞ்சனேயர் கோயில் போகாம, மலையாளப் படம் பாக்க வந்துருக்கியே… உனக்கு வெக்கமா இல்ல? என் ஃப்ரண்ட்ஸ் யாரும் பாத்தா என்னை காறித் துப்ப மாட்டானுங்க… அது இதுன்னு ஏறிட்டேன். பாவம்… மனுஷன் இடைவேளையோடவே ரிட்டர்னாயிட்டாரு…''
நான் சத்தமாக சிரித்தேன்.
அன்று பிச்சையுடன் போன படத்தில், வெயிட்டாக நான்கைந்து ஸீன்கள் இருந்தன. தொடர்ந்து பிச்சையுடன், ஏராளமான மலையாளப் படங்களுக்கு சென்றேன். இருவரும் வாடா, போடா என்று பேசிக்கொள்ளும் அளவிற்கு நெருக்கமாகிவிட்டோம்.
பிச்சையுடன் மலையாளப் படங்களுக்கு செல்வதே ஒரு சுவையான அனுபவம். ஹீரோ கட்டிலில் படுத்துக்கொண்டு, ஃபேனைப் பார்த்துகொண்டிருப்பான். ''இப்பப் பாரு… ஃபேன க்ளோஸ் அப்ல காமிப்பான். அப்படியே ட்ரீம் சீன் வரும்…' என்பான். அப்படியே வரும். கதாநாயகி தனியாக வீட்டினுள் ஓரிடத்தை நோக்கி நடந்துகொண்டிருப்பாள். ''இப்ப பாரு குளிக்கிற ஸீன…" என்று பிச்சை சொல்லிமுடிக்கவும், அவர்கள் குளிக்க ஆரம்பிக்கவும் சரியாக இருக்கும்.
மேலும் இம்மாதிரி படங்களில், இடைவேளைக்குப் பிறகு, 'பிட்' என்று கற்றறிந்த அறிஞர்களால் அழைக்கப்படும் நீலப்படக் காட்சிகளை ஓட்டுவார்கள். அப்போது தியேட்டரில் நள்ளிரவு மயானம் போல நிலவும் மரண அமைதியை, நான் வேறு எங்கும் இன்று வரையிலும் பார்த்ததில்லை. ஆனால் அந்த பிட் எப்போது வரும் என்று யாராலும் நிச்சயமாக சொல்லமுடியாது. ஆனாலும் பிச்சை மட்டும் கரெக்டாக சொல்லிவிடுவான். ''இப்ப பாரு பிட்ட'' என்பான். அடுத்த வினாடி திரையில் பிட் ஓடும். அதனால் நண்பர்கள் மத்தியில் பிச்சை மீது ஒரு தனி மரியாதை இருந்தது. ''பிட்டு வரப்போறத எப்படிடா கரெக்டா சொல்ற?'' என்று நாங்கள் எல்லோரும் பலமுறை கேட்டிருக்கிறோம். ஆனால் சொல்லவே மாட்டான். ''சொன்னா ரெஸ்பெக்ட்டு போயிடும்ல்ல…'' என்பான்.
இந்த பிட்டு ஓடும் போது பிச்சை பயங்கர டென்ஷனாகி விடுவான். வேகமாக ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொள்வான். ஒரு டிவி ரிப்பேர்காரர் டிவியை ரிப்பேர் செய்யும்போது அதன் உள் பாகங்களை நுணுக்கமாக பார்ப்பது போல் அக்காட்சியை பார்வையிடுவான். இடையிடையே, ''கேமிராவப் பாக்காதடா….'' என்று ஹீரோவுக்கும், ''இப்ப ஒரு க்ளோஸ் அப் வையுடா…'' என்று கேமராமேனுக்கும் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுப்பான்.
இவ்வாறு மலையாளப் படங்கள் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பிரச்னை. எங்கள் ஊர் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் இப்படங்களைப் பார்க்க மஃப்டியில் வருவார். கவனியுங்கள். பிடிப்பதற்கு அல்ல. பார்ப்பதற்கு. வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று, படம் ஆரம்பித்து பத்து நிமிடத்திற்கு பிறகு வந்து மேல் வரிசையில் ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்வார். இடைவேளையின் போது முகத்தில் கர்ச்சீப்பை போட்டு மூடிக்கொள்வார். பிறகு இடைவேளைக்கு பிந்தைய பிட் காட்சி முடிந்தவுடன் வேகமாக வெளியேறி விடுவார். இதனை கவனித்துவிட்ட பிச்சை பசங்களிடம் பேசி, ஒரு ஏற்பாடு செய்து வைத்திருந்தான்.
மறு வாரம் படம் ஆரம்பித்து, சப் இன்ஸ்பெக்டர் வந்து உட்கார்ந்தவுடன் பிச்சைக் குழுவினர் வேலையை ஆரம்பித்தனர். அனைவரும் இரண்டு குழுக்களாக பிரிந்துகொண்டு பாட ஆரம்பித்தனர்.
''கோபாலா…''
''ஏன் சார்?''
''வந்தாச்சா?''
''வந்தாச்சு…''
''யாரு வந்தா?''
''எஸ்ஐ மாமா…''
''எங்கருக்கார்?''
''இதோ பார்…'' என்று பிச்சை எழுந்து சப் இன்ஸ்பெக்டர் இருந்த திசையை நோக்கி கைகாட்ட… பசங்கள் எல்லாம் விசில் அடித்து ஏக கலாட்டா செய்துவிட்டனர். நொந்து போன சப் இன்ஸ்பெக்டர் வேக, வேகமாக வெளியேறினார்.
படம் முடிந்து நாங்கள் தம்மெல்லாம் அடித்துவிட்டு, கடைசியாக சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம். அது வரையிலும் எங்கேயோ மறைந்திருந்த சப் இன்ஸ்பெக்டர், சட்டென்று எங்கள் முன் வந்து நிற்க, நாங்கள் அதிர்ந்துவிட்டோம். சப் இன்ஸ்பெக்டர் ஒரு வார்த்தை கூட பேசாமல், பிச்சையின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, ஜீப்பில் ஏற்றினார்.
நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்து, பிச்சை வீட்டுக்குச் சென்று விஷயத்தை கூறினேன். எதற்காக என்றெல்லாம் கூறாமல், கடைத்தெருல நின்னுட்டிருந்தோம். திடீர்னு சப் இன்ஸ்பெக்டர் வந்து பிச்சைய இழுத்துட்டுப் போயிட்டாரு என்று கூறினேன். உடனே பிச்சையின் அப்பாம்மா, அக்கா, தங்கை என்று குடும்பமே கிளம்பி ஸ்டேசனுக்கு வந்துவிட்டது.
நாங்கள் ஸ்டேசனுக்குச் சென்றபோது பிச்சை ஜட்டியோடு உட்கார வைக்கப்பட்டிருந்தான். முகத்தில் அடி வாங்கியதற்கான அறிகுறிகள் தெரிந்தன.
''அய்யோ… சார்… என் மவன் என்ன சார் பண்ணினான்?'' என்று பிச்சையின் அம்மா கதறினார்.
என்னைத் தனியாக அழைத்துச் சென்ற சப் இன்ஸ்பெக்டர், ''அறிவு கெட்ட நாயே… ஏன்டா அவங்க வீட்டுல கூப்டுகிட்டு வந்த… ரெண்டு தட்டு, தட்டிட்டு அரை மணி நேரம் கழிச்சு நானே அனுப்பியிருப்பேன். இப்ப நான் மலையாளப் படம் பாக்க வந்தது ஊருக்கே தெரியணுமா?'' என்றார்.
''நான் அதெல்லாம் சொல்லல சார்… ஏன்னு தெரியல. அழைச்சுட்டு போயிருக்காங்கன்னுதான் சொன்னேன்.''
''அப்பாடா…'' என்று சப் இன்ஸ்பெக்டர் நகர்ந்தார்.
என்னை அருகே அழைத்த பிச்சை, ''பொறம்போக்கு நாயே… ஏன்டா எங்க வீட்டுல அழைச்சுட்டு வந்த? அதுவும் எங்கம்மா, அக்கான்னு எல்லாத்தையும் அழைச்சுட்டு வந்துருக்க. நான் மலையாளப்படம் பாத்தது இவங்களுக்கெல்லாம் தெரியணுமா?'' என்றான்.
''நான் என்னா விஷயம்னு சொல்லல…'' என்றவுடன்தான் பிச்சை நிம்மதி பெருமூச்சு விட்டான்.
பிச்சையின் அக்கா, ''என் தம்பி என்ன சார் பண்ணினான்? சொல்லுங்க சார்… டேய் என்னத்தடா பண்ணித் தொலைச்ச?'' என்று பிச்சையை பார்த்தும் கேட்டார். சப் இன்ஸ்பெக்டர், பிச்சை இருவரும் வாயையே திறக்காமல் மௌனமாக இருந்தனர்.
''நீயாச்சும் சொல்லுடா… அவன் என்னடா பண்ணினான்?'' என்று பிச்சையின் அப்பா என்னிடம் கேட்டார். நானும் வாயைத் திறக்கவில்லை.
''சனிக்கிழமையும் அதுவுமா போலீஸ் ஸ்டேசன்ல வந்து உக்காந்திருக்கியே…'' என்று பிச்சையின் அம்மா அழ… பிச்சையின் அப்பா யோசிக்க ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் ஒரே ரத்தமல்லவா? ''இன்னக்கி சனிக்கிழமையா? சனிக்கிழமை காலைல தகராறுன்னா….'' என்று எங்களை சந்தேகத்துடன் பார்த்தார். அவரும் மலையாளப் படம் பார்ப்பவரல்லவா? அதனால் தியேட்டரில்தான் ஏதோ தகராறு என்று ஊகித்துக்கொண்டார்.
சப் இன்ஸ்பெக்டர் சட்டென்று சுதாரித்துக்கொண்டு, ''சார்… நீங்க பையனை அழைச்சுட்டு போங்க…'' என்று பிச்சையின் ட்ரெஸ்ஸை தூக்கி போட்டார்.
''என் மவன் என்ன பண்ணினான் சார்? எதுக்கு அழைச்சுட்டு வந்தீங்க?'' என்றார் பிச்சையின் அம்மா விடாமல்.
''ஒண்ணுமில்ல… சும்மாதான்.'' என்ற சப் இன்ஸ்பெக்டர், போனை எடுத்து நம்பரை சுழற்ற ஆரம்பித்தார்.
ஸ்டேசனை விட்டு வெளியே வந்தவுடன், பிச்சையின் அப்பா மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. பிச்சையின் அம்மாதான் விடாமல், ''எனக்கு காரணம் தெரிஞ்சாகணும். ஏன்டா உன்ன ஸ்டேசனுக்கு அழைச்சுட்டு வந்தாங்க?'' என்றார்.
''ஒண்ணுமில்ல… சும்மாதான்.'' என்ற பிச்சை வேகமாக முன்னால் நடக்க ஆரம்பித்தான். ''நீயாச்சும் சொல்லுடா…'' என்று பிச்சையின் அக்கா என்னிடம் கேட்க… சில வினாடிகள் தீவிரமாக சிந்தித்த நான், ''ஒண்ணுமில்ல… சும்மாதான்….'' என்றேன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு, நான் மலையாளப் படங்கள் பார்ப்பதை குறைத்துக்கொண்டேன். ரொம்ப நல்ல(?) படம் என்று யாராவது சொன்னால் மட்டும் போக ஆரம்பித்தேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, புத்தகம் படிப்பதில் எனக்கு தீவிர ஆர்வம் ஏற்பட்டு… அசோகமித்திரன், வண்ணதாசன்… என்று திசைமாறினேன். பிச்சையுடன் படங்கள் பார்ப்பது சுத்தமாக நின்றுபோயிற்று.
ஒரு நாள் திடீரென்று வீட்டுக்கு வந்திருந்தான் பிச்சை. ''ஒரு முக்கியமான மேட்டர்… அதான் நேரா வந்துட்டேன்.'' என்றான்.
''என்ன விஷயம்?''
''பசங்களுக்கு லோக்கல்ல, பழைய மலையாளப் படமா பாத்து அலுத்துப்போயிடுச்சு. தஞ்சாவூர் பர்வீன் தியேட்டர்ல 'லயனம்' படம், அடுத்த வாரம் ரிலீஸ். அதான் ஒரு சின்ன டூர் அரேஞ் பண்ணியிருக்கேன். காலைல இங்கருந்து கிளம்புறோம். போறப்ப பெரிய கோயில் போயிட்டு, காலைக் காட்சி லயனம். அப்புறம் மேட்னி திருவள்ளுவர் தியேட்டர்ல 'மலையத்திப் பெண்' படம் போறோம். ஈவ்னிங் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் போறோம்…. அப்படியே கும்பகோணம் வந்து சாரங்கபாணி கோயில் போயிட்டு, செகண்ட் ஷோ ''திருட்டுப் புருஷன்' பாத்துட்டு ரிட்டர்ன். எப்படி ப்ரோகிராம்?''
காமத்தையும், கடவுளையும் ஒன்றாக இணைக்கும் பிச்சையின் பயணத்திட்டத்தை கேட்டு எனக்கு புல்லரித்துபோனது.
''என்ன வாறியா? ஆளுக்கு அம்பது ரூபாய்…''
''வரல பிச்சை. நீஙக போய்ட்டு வாங்க… எக்ஸாம்லாம் வருது…''
''ஏங்கடா திடீர் திடீர்னு திருந்துறீங்க. சொல்லிட்டு திருந்துங்கடா…''என்று கூறிவிட்டு சென்றான் பிச்சை.
மலையாளப் படம் பார்க்கவராத என்னுடன் பழகுவதை அவன் கௌரவ குறைச்சலாக நினைத்தானோ என்னவோ… அதன் பிறகு பிச்சை என்னுடன் பேசுவதை குறைத்துக்கொண்டான்.
நான் கல்லூரி படிப்பை முடித்தவுடன், என் அப்பாவுக்கு மெட்ராஸ்க்கு டிரான்ஸ்ஃபராக… பிச்சையிடம் சென்று விடைபெற்றுக்கொண்டேன்.
''ம்… நல்லபடியாதான் இருந்தோம். நடுவுலதான் கொஞ்சம் மனஸ்தாபம் ஆயிடுச்சு.'' என்றான் பிச்சைமுத்து.
''மனஸ்தாபம்ல்லாம் ஒண்ணுமில்லயே… மலையாளப்படம் பாக்க வர்றதுல்ல அவ்ளோதான்…''
''மலையாளப் படம் பாக்க வரலன்னாலே, என்னோட மனஸ்தாபம் ஆன மாதிரிதான்.'' என்றான் பிச்சைமுத்து.
''பரவால்ல விடு. அப்புறம் பிச்சை… நான் மெட்ராஸ் போறதுக்கு முன்னாடி இந்த ஒரு விஷயத்த மட்டும் சொல்லிடு. இன்டர்வெல்லுக்கு பின்னாடி பிட்டு போடப் போறத எப்படி கரெக்டா சொல்லுற?''
''சொல்றேன். ஆனா லோக்கல்ல யாருக்கும் சொல்லமாட்டேன்னு சத்தியம் பண்ணு…'' என்று சத்தியம் வாங்கிக்கொண்டு, ''அதாவது என்னன்னா… தியேட்டர்ல ரெண்டு ப்ரொஜக்டர் இருக்கும். இன்டர்வெல்லப்ப ஒரு ப்ரொஜக்டர்ல பிட்டு ஃபிலிம போட்டு ரெடியா வச்சிருப்பாங்க. இடைவேளைக்குப் பிறகு மெயின் படம் ஓடிட்டிருக்கறப்ப, அந்த பிட்டு ப்ரொஜக்டர போட்டு விட்டுட்டு, மெயின் பட ப்ரொஜக்டர நிறுத்திடுவாங்க. பிட்டு ப்ரொஜக்டர் ஓட ஆரம்பிக்கிறப்ப ப்ரொஜக்டர் ஓடற சத்தத்துல லேசா… மைனூட்டா ஒரு வித்தியாசம் இருக்கும். இடைவேளைக்கு அப்புறம் காத தீட்டி வச்சுகிட்டு உக்காந்திருப்பன். ப்ரொக்ஜக்டர் சத்தம் வேற மாதிரி கேக்க ஆரம்பிச்சவுடனே நான் சொல்லுவேன். கரெட்டா பிட்டு வரும்.'' என்ற பிச்சையை நான் பிரமிப்புடன் பார்த்தேன்.
அதன் பிறகு ஏறத்தாழ 20 வருடங்கள் கழித்து, இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில்தான் பிச்சையை சந்தித்தேன்.
என்ட்ரன்ஸ் டிக்கெட் வாங்குமிடத்தில்; எனக்கு முன்பு க்யுவில் நின்றிருந்த பிச்சையை எனக்கு முதலில் அடையாளம் தெரியவில்லை. அதற்குள் வழுக்கை விழ ஆரம்பித்து, லேசாக தொப்பையெல்லாம் போட்டு, ஆளே மாறிப்போயிருந்தான். பிறகு அடையாளம் தெரிந்தவுடன், ''பிச்சை…' என்று சத்தமாக அழைத்துக்கொண்டே அருகில் சென்றேன். அவனும் சில வினாடிகள் விழித்துவிட்டு… பிறகு அடையாளம் கண்டு, ''சந்துரு'' என்று அழைத்தபடி என்னை கட்டிப்பிடித்துகொண்டான்.
சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து, ''நீ மெட்ராஸ்லதான் இருக்கியா?'' என்றேன்.
''இல்ல…திருவனந்தபுரத்துல இருக்கேன்.''
''என்னடா… மலையாளப் படமா பாத்து, பாத்து… கடைசில கேரளாவுலயே செட்டிலாயிட்டியா?''
''அது பெரிய கதை… காலேஜ் முடிஞ்சுது. ஆனா பாஸ் பண்ணல. எட்டு பேப்பர் அரியர்ஸ்… தினம்… எனக்கும், எங்கப்பாவுக்கும் சண்டை… எங்க மாமா ஒருத்தர், திருவனந்தபுரத்துல, சினிஃபீல்டுல ப்ரொடக்ஷன் மேனேஜரா இருந்தாரு. என்கூட வாடான்னு அழைச்சுட்டு போனாரு. அவருக்கு ஹெல்ப்பா இருந்தேன். அப்படியே சினிமால இன்ட்ரஸ்ட் வந்து, ஒரு நல்ல டைரக்டர்கிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன். இப்ப தனியா படம் டைரக்ட் பண்ணிகிட்டிருக்கேன்… ஷூட்டிங்ல்லாம் முடிஞ்சிருச்சு. போஸ்ட் ப்ரொடக்ஷன் ஒர்க்லாம் மெட்ராஸ்ல நடக்குது. அதுக்குதான் மெட்ராஸ் வந்துருக்கேன்…''என்ற பிச்சையை சிறிது நேரம் ஆச்சரியத்துடன் பார்த்துகொண்டிருந்துவிட்டு, பிறகு சந்தேகத்துடன், ''என்ன படம்டா?"' என்றேன்.
''ஆர்ட் ஃபிலிம். என்.எஃப்.டி.ஸி. தயாரிப்புடா. ஸ்க்ரிப்ட்ட அப்ரூவ் பண்ணி, 35 லட்சம் ரூபாய் தந்துருக்காங்க… படம் ஃபுல்லா ஒரு ஸீன்ல கூட பொம்பளையே கிடையாது. ஒரு வயசான தாத்தாவுக்கும், பேரனுக்கும் இருக்கிற பாசத்தப் பத்தின கதை. எப்படியும் அவார்ட் கிடைச்சுடும்னு நம்புறேன்…''என்று சீன் பிச்சை கூறிக்கொண்டே செல்ல… நான் மயக்கம் வந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காக, பிச்சையின் தோளைப் பிடித்துக்கொண்டேன்.
5 Comments
உங்கள் எழுத்து பல இடங்களில் சிரிக்க வைத்தது. உண்மையில் உங்கள் நண்பர் இயக்குநராகியதையிட்டு எனக்கும் மயக்கமே!
ReplyDeleteஇதை எழுதியது ஜி.ஆர்.சுரேந்திரநாத் அவர்கள்.
Deleteஎழுத்துநடை வித்தியாசமா இருக்கேன்னு பார்த்தேன்! சுவையான கதை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநல்லதோர் படைப்பு. படிப்பதற்கு சுவாரஸ்மாக இருந்தது. நல்வாழ்த்துகள்
ReplyDeletegood 1...laugh very lot..
ReplyDeleteDrop Anything